30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் நிரம்பி வழிகிறார்கள்.
இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர். இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பட்டிலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை தாண்டிய இவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபா பட்டில் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சி தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருப்பவர் டி.கே. நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
மாநிலங்களில் எப்படி தலைமைச் செயலாளர் பதவி இருக்கிறதோ, அதைப் போன்று மத்தியில் இருப்பது அமைச்சரவைச் செயலாளர் பதவி. இப்போது அமைச்சரவை செயலாளராக இருப்பவர் கே.எம். சந்திரசேகர், இவருக்கு அடுத்தபடியாக உள்துறை செயலாளராக இருப்பவர் சி.கே. பிள்ளை. செல்வாக்கும், அதிகாரமும் மிக்க இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.
வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா மேனன் ராவ், தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ், விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் நந்தகுமார், சிவில் விமானப்
போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார்,
செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன், நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன், ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன், கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,
குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி பேசுகிற அதிகாரிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய
பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் எம்.கே.நாராயணன் நாயர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மாதவன் நாயர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.
தமிழ்நாட்டிலிருந்தும் 2 அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு போயிருக்கிறார்கள். அந்த இருவரும் கூட கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்டவர்கள் தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு அதிகாரி தான் இப்போது மத்திய அரசில் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.
மத்தியில் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் (ஜெய்ராம் ரமேஷ்) மிகத் துணிச்சலாக தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் மதிக்காமல், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளாவிற்கு அனுமதி அளிக்கிறார் என்றால், அந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது?.
மத்தியில் ஆளுகின்ற கூட்டணி ஆட்சியில் முக்கியக் கூட்டணிக் கட்சி ஆட்சி நடத்துகின்ற தமிழகத்திற்கு பாதகமாகவும், எதிர்க்கட்சி ஆட்சி நடக்கிற கேரளத்திற்குச் சாதகமாகவும் முடிவெடுக்கும் துணிச்சலை அவருக்கு கொடுத்தது யார்?.
அவர் வெறும் பொம்மை தான். அவருக்கு சாவி கொடுத்து செயல்பட வைத்திருப்பவர்கள் யார்? என்பதை துணிந்து அறிவிக்க முதல்வர் முன்வர வேண்டும்.
http://thatstamil.oneindia.in/news/2009/10/21/tn-malayalis-are-ruling-the-nation-says-ramdoss.html