13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955
"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே ""நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே ""பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து ""ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.
ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.
No comments:
Post a Comment