Friday, September 07, 2018

இன்னும் ஏன் இட ஒதுக்கீடு தேவை?

கேள்வி: அது தான் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இல்லாமலேயே பிற சாதிகள் பொதுப்பிரிவு இடங்களை அள்ளுகிறார்களே! இன்னும் ஏன் இட ஒதுக்கீடு தேவை?
பதில்:
பொறியாளர்கள், மருத்துவர்கள், Chartered Accountantகள், அரசு அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், IAS/IPS/IFS அதிகாரிகள், நீதிபதிகள், அறிவியலாளர்கள்... இன்னும் சமூகத்தில் என்னவெல்லாம் உயர் பொறுப்புகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.
இவர்கள் அனைவரும் உங்கள் நெருங்கிய குடும்பத்தில் இருக்கிறார்களா?
என் வீட்டில் இல்லை. என் உறவுகளில் இல்லை. என் ஊரில் இல்லை. இவர்களிலும் பெண்களைப் பார்த்தால் இல்லவே இல்லை.
ஆனால், இவர்கள் அனைவரும் ஆதிக்கச் சாதிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த நாட்டின் தலைவிதியை முடிவு செய்கிறார்கள். அது ஒரு போதும் பெரும்பான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொள்வதாக அமையாது.
இந்த ஆதிக்கம் தலைமுறை தலைமுறையாக பல நூறு ஆண்டுகளாக கல்வி, செல்வம், சமூக மதிப்பு என்று அவர்களுக்குக் கடத்தப்பட்ட சொத்தின் அறிகுறி.
நாம் ஒரு ஆள் மருத்துவமோ பொறியியலோ படித்து வீடோ காரோ வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டால், ஒட்டு மொத்த சமூகமும் முன்னேறி விட்டதாகப் பொருள் இல்லை.
என் தாத்தா, பாட்டி படிக்கவில்லை.
என் அப்பா M.Com. அம்மா படிக்கவில்லை.
நான் B.Tech, M.S. என் அக்கா கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை.
என் மகள் மருத்துவரோ அறிவியல் அறிஞரோ ஆகலாம்.
ஆனால், என் பேத்தி வழக்கறிஞர் ஆகும் காலத்திலும் உச்ச நீதிமன்றத்தில் யார் தீர்ப்பு சொல்வார்கள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை யார் தீர்மானிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
இட ஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்புத் திட்டமோ வறுமை ஒழிப்புத் திட்டமோ அல்ல. அது அதிகாரப் பகிர்வுத் திட்டம். 
அதிகாரம் என்பது பல அடுக்குள் கொண்டது. அதன் அத்தனை அடுக்குகளிலும் அனைத்துச் சாதியினரும் உரிமை பெறும் வரையிலும் இங்கு இட ஒதுக்கீடு என்னும் தத்துவத்திற்கான தேவை இருக்கிறது.

IIT பேராசிரியர்களில் ஆதிக்கச் சாதியினர் தவிர வேறு யாருமே இல்லாமல் இருப்பது எப்படி?

இதோ இப்படி: 

"For subjects in science and technology, posts will be reserved for lecturers and assistant professors. In areas like management, social sciences and humanities, reservations will be applicable up to the professor level. The ministry allows IITs to dereserve the posts after a year, if they do not get filled "despite all efforts". 

அதாவது, ஓராண்டு காலம் கண்துடைப்புக்கு நேர்காணல் நடத்தி விட்டு, தகுதியான ஆளே கிடைக்கவில்லை என்று ஊத்தி மூடி அனைத்து வேலைகளையும் ஆதிக்கச் சாதிகள் எடுத்துக் கொள்வார்கள். 

Refer:
https://timesofindia.indiatimes.com/india/HRD-orders-faculty-quota-IIT-directors-livid/articleshow/3173620.cms

https://indianexpress.com/article/india/president-kovind-expresses-concern-over-poor-representation-of-weaker-sections-in-higher-judiciary-4954196/

https://www.facebook.com/ravidreams/posts/10157860619288569?hc_location=ufi

குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் பெற வேண்டுமா?

கேள்வி:
நான் ஒரு முதல் தலைமுறைப் பட்டதாரி. நான் அரசு தந்த அனைத்து சமூக மேம்பாட்டுத் திட்டங்களாலும் பயன்பெற்றிருக்கிறேன். சத்துணவு திட்டம் தொடங்கி, இலவசப் பேருந்து, பொறியியல் கல்லூரி இட ஒதுக்கீடு, கல்லூரியில் படிப்பு உதவித் தொகை என்று இன்னும் எனக்குத் தெரியாத பல்வேறு திட்டங்களாலும் பயன்பெற்றிருக்கலாம். 
தற்போது, இன்றைய உலகில் நன்கு பணம் சம்பாதிக்கக் கூடிய அளவுக்கு எனக்கு வசதி வாய்ப்புகள் அமைந்துள்ளதாகவே கருதுகிறேன். 
என் கேள்வி என்னவென்றால்: நான் என் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் பெற வேண்டுமா? அதன் மூலம் வருங்காலத்தில் கல்வி/வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா? 
நான் உயர் நடுத்தர வகுப்பில் இருப்பதல், நான் பொதுப்பிரிவுப் போட்டியில் இருப்பதாகக் கருதி, 20 ஆண்டுகள் கழித்து என் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் விடலாமா?
அப்படிப் பயன்படுத்தினால், நான் என்னை விட ஏழையான ஒருவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாக உணர்கிறேன். 
என் மனசாட்சி எண்ணுவது சரியா? இல்லை, வழக்கமான ஒரு நடுத்தர வகுப்பு ஆளின் மனநிலையுடன் இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க விரும்புகிறேனா?
என்னால் சரியான சொற்களால் கேட்க முடியவில்லை என்றாலும் என் கேள்வி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். 
பதில்:
நீங்கள் கட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டையும் பயன்படுத்த வேண்டும். 
ஏன் என்றால், 
இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. அரசியல் சாசனம் உங்களுக்குத் தந்திருக்கிற உரிமை. அதனைப் பயன்படுத்த கூச்சமோ குற்ற உணர்வோ வேண்டாம். 
இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிக்கும் வேலைவாய்ப்புத் திட்டம் அல்ல. அது அதிகாரத்தைப் பகிர்வதற்கான சட்டம். 
அதனால் தான் அது சமூக “நீதி” என்று அழைக்கப்படுகிறது. 
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உங்கள் முன்னோர்கள் சாதியின் பெயரால் பெற்ற தண்டனைக்கு, உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் இந்த நாடு வழங்கும் நீதி தான் இட ஒதுக்கீடு. 
ஒரு குற்றம் நடக்கிறது. நான் பணக்காரன், அதனால் எனக்கு நீதி வேண்டாம் என யாராவது சொல்வீர்களா? பணத்துக்கும் நீதிக்கும் தொடர்பு இல்லை. 
இந்திய அரசியல் சட்டம் யார் ஒடுக்கப்பட்ட சாதிகள் என்பதை அவர்களின் சமூக நிலை, கல்வி நிலை, பொருளாதார நிலை ஆகிய மூன்றையும் வைத்தே முடிவு செய்கிறது. இதில் சமூக நிலைக்கு அதிக முக்கியத்துவமும், பொருளாதார நிலைக்குக் குறைவான முக்கியத்துவமும் தருகிறது. (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
எனவே, ஒரு தலைமுறை படித்து வேலைக்குப் போன உடன் உங்கள் ஒட்டு மொத்த நிலையும் உயர்ந்து விட்டதாக நீங்களே எண்ணிக் கொள்ள வேண்டாம். 
இந்தியாவில் தங்களை நடுத்தர வர்க்கம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பலர் உண்மையிலேயே கீழ் நடுத்தர வர்க்கம் தான் (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது? சென்னை, கேரளா போல் ஊழி வெள்ளம் வந்தாலும் உங்கள் சொத்து அழியாமல், குறையாமல் இருக்குமா?
மூன்றாம் உலகப் போரோ உலகப் பொருளாதார மந்த நிலையோ நேர்ந்தால் உங்கள் சொத்து குறையாமல் இருக்குமா?
ஆனால், போர் வந்தாலும் வெள்ளம் வந்தாலும் உங்கள் சாதி மாறாது. சாதிப் பாகுபாடும் மாறாது. (தொடர்புடைய செய்திக்கு மறுமொழியைப் பாருங்கள்)
நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் ஆகி 80 ஆண்டுகள் வாழ்ந்தாலும், உங்களுக்கு அடுத்து 3 தலைமுறைகள் வந்தாலும் உங்கள் சாதி மாறாது. சாதிப்பாகுபாடும் மாறாது. 
நீங்கள் முன்னேறி விட்டீர்கள் என்று நினைப்பீர்கள். 
ஆனால், புதிதாக நீட் போன்று ஒரு தேர்வு முறையைக் கொண்டு வந்து உங்கள் படிப்பே பயனற்றதாக மாற்றுவார்கள். அப்போது பொதுப் பிரிவில் இடம் கிடைக்காமல் போகக் கூடிய உங்கள் மகனுக்கும் மகளுக்கும் இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கலாம். அந்த வாய்ப்பை நீங்கள் ஏன் மறுக்க வேண்டும்? அது உங்கள் குழந்தையின் உரிமை அல்லவா?
இட ஒதுக்கீடு என்பது உங்கள் பாட்டன்கள் உங்கள் பேரன்களுக்கு அவர்கள் பெயரில் எழுதி விட்டுச் சென்ற சொத்து. அதனைப் பத்திரமாகக் காப்பாற்றி கைமாற்றி விடுவது தான் உங்கள் வேலை. மறுப்பதோ தானம் செய்வதோ உங்கள் வேலை இல்லை. 
இட ஒதுக்கீடு பொதுவாக இரண்டு காரணங்களுக்காகத் தரப்படலாம்:
1. அங்கீகாரம் - இராணுவ வீரர்களுக்கு (அல்லது அவர்கள் வாரிசுகளுக்கு), விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது அல்லவா? இது அவர்களுக்கான அங்கீகாரம். கல்வியில், வேலைவாய்ப்பில், ஏன் நாடாளுமன்றத்தில் கூட இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது. பல் வேறு திறமைகள், கடமைகள் உள்ளவர்களையும் ஊக்குவிக்க வேண்டும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இட ஒதுக்கீடு வழங்குகிறார்கள். இது பொதுவாக அளவில் குறைவாக இருக்கும்.
2. அதிகாரத்தில் பிரிதிநிதித்துவம் - சமூகத்தின் உள்ள பல்வேறு மக்களுக்கும் அவர்களின் இருப்புக்குத் தகுந்தவாறு அதிகாரத்தில் பிரிதிநிதித்துவம் வழங்குகிறார்கள். 
உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு. 
தமிழக அரசு வேலைகளில் 30% பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. 
இரயில்களில், பேருந்துகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. 
மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு துறைகளில் இட ஒதுக்கீடு உண்டு.
இவர்கள் யாரும், “ஐயகோ, நான் ஒரு பணக்கார மாற்றுத் திறனாளி அல்லது பெண். எனக்கு இந்த இட ஒதுக்கீடு வேண்டாம்” என்று சொல்வதில்லை. ஏன் என்றால் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் ஒரு பெண்ணாகவோ மாற்றுத் திறனாளியாகவோ இருக்கும் போது சமூகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி தான் அந்த இடத்துக்கு வர முடிகிறது என்பது உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. 
அது போன்று தான் சாதியும். சாதி முறையின் இருப்பே இங்கு பல தடைகளை உருவாக்குகிறது. 
உங்கள் பெற்றோர் பட்டம் பெறவில்லை. 
நீங்கள் பொறியியல் பட்டதாரி. 
உங்கள் பெண் மருத்துவரோ CAவோ ஆகலாம். 
உங்கள் பேரன் IAS/IPS/IFS அதிகாரி ஆக வேண்டும். 
உங்கள் கொள்ளுப் பேரன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக வேண்டும். 
அவர்கள் என்ன படிப்பு, வேலைக்குப் போவார்கள் என்று இன்றே உங்களால் முடிவு செய்ய இயலாது. 
அவர்கள் இந்த உயரங்களுக்குச் செல்லும் போது, அவர்களிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு சிக்கலாகவே இருக்காது. 
இன்னும் இந்தியாவின் நீதித்துறையில், ஊடகங்களில், அதிகார மட்டங்களில் எப்படி சாதிப் பாகுபாடு நிலவுகிறது என்று அறிய மறுமொழிகளில் உள்ள இணைப்புகளைப் பாருங்கள். 
இன்னொன்று, தமிழகத்தில் தான் இட ஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
தமிழகம் தாண்டினால், பல மாநிலங்களில், ஒன்றிய அரசில் இட ஒதுக்கீட்டு இடங்களையே சரியாக நிரப்புவதில்லை. 
பொதுப்பிரிவு இடங்கள் முழுதையும் ஆதிக்கச் சாதிகளுக்கான அறிவிக்கப்படாத இட ஒதுக்கீடாக வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் தகுதியான ஆள் இல்லை என்று பொய் சொல்லி அவற்றைப் பொதுப் பிரிவுக்கு மாற்றுகிறார்கள். எனவே, நீங்கள் ஒரு இடத்தை விட்டுக் கொடுத்தால், அது உங்கள் பிரிவில் உள்ள இன்னொரு ஏழைக்குத் தான் போய் சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 
IITயில் பேராசிரியர் வேலைக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். 
ஒன்று பொதுப்பிரிவில். 
இன்னொன்று உங்கள் சாதிப் பிரிவில். 
பொதுப்பிரிவுக்குக் கட்டாயம் பொதுப்பிரிவு ஆளைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
உங்கள் மகனிடம் சாதிச் சான்றிதழ் இருந்து சரியான தகுதியும் இருந்தால், உங்கள் சாதிப் பிரிவிலாவது இடம் தாருங்கள் என்று வழக்கு போட்டு கூட மோதிப் பார்க்கலாம். 
ஆனால், சாதிச் சான்றிதழே இல்லை என்றால் தகுதியான ஆளே கிடைக்கவில்லை என்று அதையும் பொதுப்பிரிவுக்கு மாற்றி இன்னொரு பொதுப் பிரிவு ஆளுக்கு வேலை தருவார்கள். 
இது எல்லாம் கற்பனை இல்லை. ஆதாரத்துக்கு மறுமொழியில் உள்ள இணைப்பைப் பாருங்கள். 
சாதிப்பாகுபாட்டின் காரணமாக உங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களிடம் இட ஒதுக்கீடு என்னும் தடுப்பூசி/insurance தேவை. அவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படாமல் கூட போகலாம். ஆனால், சாதிச் சான்றிதழை நீங்கள் இப்போது வாங்கி வைக்காமல் விட்டால், அவர்களுக்கு அது தேவைப்படும் காலத்தில் கிடைக்காது. 
உங்களிடம் சாதிச் சான்றிதழ் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கூடுதல் மதிப்பெண்கள் இருந்தால் தானாக பொதுப்பிரிவில் இடம் பிடித்து விடுவார்கள். ஆனால், சாதிச் சான்றிதழ் இருந்தால் தான் இட ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற முடியும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இன்சூரன்ஸ், தடுப்பூசி போல. தக்க சமயத்தில் உதவும். 
நீ போதுமான அளவு முன்னேறிவிட்டாய், உன் மகனுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்பது தான் Creamy layer என்னும் சூழ்ச்சி. 
இது என்ன சூழ்ச்சி என்றால், விவசாயி மகன் குமாஸ்தா ஆகலாம். ஆனால், குமாஸ்தா மகன் கலெக்டர் ஆகக் கூடாது என்னும் சூழ்ச்சி. 
இட ஒதுக்கீடு முறையால் அதிகம் பாதிக்கப்படுவது ஆதிக்கச் சாதிகள் தான். அவர்களால் என்றும் இட ஒதுக்கீடு பெற முடியாது. எனவே, இட ஒதுக்கீடு பெறும் உங்களைப் போன்ற மற்ற பிரிவினர்களைக் குழப்பி விட்டு உங்களை எல்லாம் பொதுப்பிரிவுப் போட்டிக்கு இழுத்து விட்டால், இட ஒதுக்கீட்டின் பயன் நீர்த்துப் போகும். 
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி தொடங்கிய மருத்துவர் கிருஷ்ணசாமி, “இட ஒதுக்கீடு தான் எங்கள் முன்னேற்றத்தைக் கெடுத்தது, எங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவியுங்கள்” என்று முன்வைக்கும் வினோத வேண்டுகோள்கள் எல்லாம் இந்தச் சூழ்ச்சிக்கு ஆளானதால் தான். 
இப்போதும் ஒன்றிய அரசு வேலை, வாய்ப்புகளில் இந்த Creamy layer என்னும் சூழ்ச்சி உள்ளது. 
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் Creamy layer கொண்டு வர முயன்று, அடுத்து வந்த தேர்தலில் அதற்கான விலையைக் கொடுத்தார். 
தமிழ்நாட்டு மக்களே தோற்கடித்த ஒரு ஐடியா இது. எனவே, நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம். 
இந்த அதிகார அமைப்பு இருக்கிறதே! ஏழைகளுக்கு உதவ உங்கள் gas மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று விளம்பரம் செய்வார்கள். நீங்களும் அதை நம்பி விட்டுக் கொடுத்து, கூடுதல் விலைக்கு gas வாங்குவீர்கள். அப்புறம் gas விலையும் ஏறிக் கொண்டே போகும். நீங்கள் விட்டுக் கொடுத்த தொகையும் யாருக்குப் போகிறது என்றும் தெரியாமல், அரசு தொடர்ந்து காசை வீணாக்கிக் கொண்டிருப்பதையும் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளவே நாளாகும். 
அது போல், இந்த creamy layerம் ஒரு சதுரங்க வேட்டை technique. 
என்ன சொன்னாலும் சரி, இன்னமும் குற்ற உணர்வாக இருக்கிறது என்கிறீர்களா?
சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய, இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன் போய் சேராமல் இருக்கும் குடும்பங்களுக்கு உரிய வாய்ப்பு தர சரியான முறை ஒன்று உள்ளது. அது தான் உள் ஒதுக்கீடு முறை. 
தமிழ்நாட்டில் மொத்தமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பிரித்துத் தனியே மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவை உருவாக்கியதும், அருந்ததியர், இசுலாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுத்ததும் மிகவும் சரியான நடைமுறைகள். இதையெல்லாம் காலத்தின் தேவை கருதி அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம். 
முதல் தலைமுறைப் பொறியாளராக வந்துள்ள உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டிலும் ஒன்றிரண்டு தலைமுறைகள் ஏற்கனவே பொறியியலாளர்களாக இருந்தவர்களின் பிள்ளைகள் இன்னும் கூடுதல் தன்னம்பிக்கையுடன் கல்லூரி, வேலை இடங்களில் உலவுவதைப் பார்த்திருப்பீர்கள். 
இந்தியாவின் அதிகார அடுக்குகளுக்கு, ஒரு மூன்றாம் தலைமுறை தலித் officerஐக் கையாள்வதை விட முதல் தலைமுறை தலித் officerஐக் கையாள்வது சுலபமானது. அது அதைத் தான் விரும்புகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வலுவான குரல் ஒலிப்பதை அது விரும்புவதில்லை. 
எனவே, இன்னொரு ஏழை மாணவருக்கு வாய்ப்பு பறிபோகுமா என்று கவலைப்படாமல் உங்கள் மகளை அதிகாரம் உலவுகிற அத்தனை இடங்களுக்கும் அனுப்பி வையுங்கள். நீங்கள் சார்ந்து வந்திருக்கும் சமூகத்தின் குரலாக இன்னும் துணிவுடன் ஒலிக்க, அவருக்கு உங்கள் குடும்பம் கடந்த வந்த வரலாற்றையும் சொல்லி வளருங்கள். 
வாழ்த்துகள்

https://www.ibtimes.co.in/high-caste-hindus-refuse-get-into-boat-christian-rescuer-kerala-778355

Friday, May 11, 2018

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வியோடு வெளியூர் சுற்றுலா செல்லும் மதுரை வாசிகளே! என்ன இல்லை மதுரையில்.

 நீங்கள் ஆன்மீகவாதியா? தொல்லியல் மற்றும் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவரா? மானுடவியல் மீது ஆர்வம் கொண்டவரா? பசுமை மற்றும் பல்லுயிர்கள் மீது ஆர்வம் கொண்டவரா? அட எதுவும் இல்லைங்க, அப்படியே வண்டியெடுத்துட்டு போயி எங்கையாவது ஒரு நகர வாசமற்ற கிராமத்துல தங்கி குளிச்சு கும்மாளம் போடா மதுரையில் இடமிருக்கா என கேட்பவரா? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதுரை பல்வேறு முகங்களை கொண்டு இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் நீங்கள் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்பிடங்கள்:
1. கீழடி
2. அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம்
3. நரசிங்கப்படி ஈமக்காடு
4. பெருங்காமநல்லூர் நினைவுத்தூண்
5. யானை மலை சமண படுகை
6. கீழக்குயில்குடி மலை அய்யனார் மற்றும் சமண படுகை
7. முத்தப்பட்டி மலை சமணப்படுகை
8. மாங்குளம் - மீனாட்சிபுரம் சமணப்படுகை
9. அரிட்டாபட்டி மலை சமணப்படுகை
10. திருப்பரங்குன்றம் சமணப்படுகை
11. மேட்டுப்படி சித்தர்மலை சமணப்படுகை
12. மாடக்குளம் கண்மாய் கல்தூண்
13. வரிச்சூர் குன்னத்தூர் மலை படுகை
14. விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம் மலை சமணப்படுகை
15. அழகர்மலை - கிடாரிபட்டி சமணப்படுகை
16. குப்பல்நத்தம் மலை சமணப்படுகை
17. கருங்காலக்குடி சமணப்படுகை
18. கீழவளவு மலை சமணப்படுகை
19. காரைக்கேணி சமணர் படுகை
20. மலைப்பட்டி புத்தூர்மலை சமணர்படுகை
21. கோவலன் பொட்டல்
22. மருதநாயகம் (கான்சா சாகிப்) கல்லறை, சம்மட்டிபுரம்
23. உச்ச பறம்பு மலை வைரவர் கோவில்
24. ஈசன் கோவில், கருங்காலக்குடி
25. அக்னீஸ்வரன் கோவில், தேவன்குறிச்சி மலை
26.சாப்டூர் அரண்மனை
27.கபாலி மலை கோவில்

கோவில்களும் பழமையான கட்டிடங்களும்:
1. மீனாட்சி அம்மன் கோவில்
2. அழகர் கோவில்
3. திருப்பரங்குன்றம்
4. திருவாதவூர் கோவில்
5. நரசிங்க பெருமாள் கோவில்
6. திருமோகூர் கோவில்
7. கொடிக்குளம் பெருமாள் கோவில்
8. திருவேடகம் கோவில்
9. நாயக்கர் மகால்
10. புதுமண்டபம்
11. ராணி மங்கம்மாள் சத்திரம் (காந்தி அருங்காட்சியகம்)
12. வைகை ஆற்று மைய மண்டபம்
13. நரசிங்கப்பட்டி ராமயண ஓவிய சாவடி
14. விளக்குத்தூன்
15 மதுரை வாயில் கோட்டை
16. காந்தி நிகேதன் ஆசிரமம், கல்லுப்பட்டி

கோவில்காடுகள்:
1. இடையபட்டி கோவில்காடுகள்
2. அ.வளையபட்டி நொண்டி சாமி கோவில்காடு
3. கொடிமங்கலம் முனியாண்டி கோவில்காடு
4.மஞ்சமலை ஆண்டி கோவில்காடு

பெருவிழாக்கள்:
1. சித்திரை திருவிழா
2. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
3. தெப்ப திருவிழா
4. சந்தனகூடு திருவிழா
5. திருப்பரங்குன்றம் கிரிவலம்
6.புட்டுத் திருவிழா

நீராதார தளங்கள்
1. குட்லாடம்பட்டி அருவி
3.கேணி அருவி, சாப்டூர்
4. பரமசிவன் பாறை ஊத்து, சாப்டூர்
5. அழகர்மலை சித்தருவி
6. ராக்காயி தீர்த்தம் (சிலம்பாறு) அழகர்மலை
7. நாகதீர்த்தம், காக்கவூத்து, நாகமலை
8. வண்டியூர் தெப்பக்குளம்
9.  குளிராட்டி அருவி, தே.கிருஷ்ணபுரம் .
10. மொட்டூத்து, தாழையூத்து, வாசிமலை
11. அசுவமா நதி (குதிரை ஆறு) அணை
12. விரகணூர் வைகை அணை
13. நீச்சல்குளம், தல்லாக்குளம்
14. வைகை பெரியார் கால்வாய் (குளிக்க)
15. காளிகாப்பன் கிணறு
16. சாத்தையாறு அணை
17. வையை ஆறு
18. குண்டாறு
19. கமண்டலாறு - வறட்டாறு
20. கிருதுமால் ஆறு
21. உப்பாறு
22. பாலாறு
23. திருமணிமுத்தாறு
24. மஞ்சமலையாறு

மலையேற்றம் செல்ல தோதான மலைகள்:
அழகர்மலை, சிறுமலை, நாகமலை, வகுத்தமலை, மஞ்சமலை, பெருமாள் மலை,  கிளுவமலை, புத்தூர்மலை, வெள்ளிமலை, வெள்ளமலை, கருமலை, மாமலை, குதிரைமலை, தெற்குமலை, வாசிமலை, எழுமலை, பசுமலை, உச்ச பறம்பு மலை, பெருமலை, சிரங்கி மலை, எரிச்சிமலை, கபாலி மலை உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த மலைகளும், யானைமலை, ஓவாமலை, ஒத்தமலை, பரங்குன்றம், கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், தேவன்குறிச்சி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, சித்தர்மலை, கருங்காலகுடி, வரிச்சூர் குன்னத்தூர், நடுமுதலைக்குளம், குப்பல்நத்தம், கீழவளவு, மேலவளவு, சக்கரைபீர் மலை, பஞ்சபாண்டவர் மலை, புலிப்பட்டி, தேவன்குறிச்சி உள்ளிட்ட குன்றுகளும், கரடுபட்டி கரடு, வடபழஞ்சி கரடு, பெருமாள்மலை கரடு உள்ளிட்ட கரடுகளும் சூழதான் இன்றைய மதுரை மாவட்டம் அமைந்துள்ளது. வனத்துறைக்கு உட்பட்ட மலையேற்றத்திற்கு அனுமதிப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பூங்காக்கள்:
1. ராஜாஜி பூங்கா
2. மதுரை சூழல் பூங்கா, கே.கே.நகர்
3. திருப்பரங்குன்றம் பூங்கா
4. வண்டியூர் கண்மாய் பூங்கா

பழங்குடி மக்கள் இருப்பிடம்:
1. பளியர் மக்கள் - தொட்டப்பநாயக்கனூர், எழுமலை
2. மலைவேடர் - மன்னாடிமங்கலம், வாடிபட்டி
3. காட்டநாயக்கர் - பரவை

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஊர்கள்:
1. சிவர்கோட்டை - நேசநேரி
2. சாப்டூர்
3. மாமலை
4. இடையபட்டி

பறவை காணுதலுக்கு உகந்த நீர்நிலைகள் :
1. சாமநத்தம்
2. கிளாக்குளம்
3. அவனியாபுரம்
4. வடகரை, தென்கரை சோழவந்தான்
5. மாடக்குளம்
6. வரிச்சூர் குன்னத்தூர்
7. மாத்தூர், அரும்பனூர், முதலியேந்தல்
8. சிவரக்கோட்டை மலையூரணி
9. அரிட்டாபட்டி
10. வண்டியூர் கண்மாய்

இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி எடுத்துக்கொண்டு இந்த விடுமுறை நாட்களை குழந்தைகளோடு செலவழிக்க எளிய சுற்றுலாவுக்கு மதுரைவாசிகளே புறப்படுவோமா? போகிற வழியில் பதநீர், கூழ் குடித்து கொண்டு, கட்டிய சோத்த  அல்லது வாங்கின சோத்து பொட்டினத்த மரத்தடியில் உட்கார்ந்து ருசிப்பது என ஊர் சுற்றலை இன்னும் அழகாக்கி கொள்ளுங்கள். சொந்த ஊரை தெரிந்து வைத்திருப்பது சொர்க்கத்தின் முகவரியை கையில் வைத்திருப்பதற்கு சமம். எளிய மக்களுக்கான எளிய சுற்றுலா உள்ளூரை வட்டமடிப்பதில் இருந்து துவங்குகிறது. வாங்க போவோம்.

Received in WhatsApp share.