Friday, September 07, 2018

இன்னும் ஏன் இட ஒதுக்கீடு தேவை?

கேள்வி: அது தான் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இல்லாமலேயே பிற சாதிகள் பொதுப்பிரிவு இடங்களை அள்ளுகிறார்களே! இன்னும் ஏன் இட ஒதுக்கீடு தேவை?
பதில்:
பொறியாளர்கள், மருத்துவர்கள், Chartered Accountantகள், அரசு அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், IAS/IPS/IFS அதிகாரிகள், நீதிபதிகள், அறிவியலாளர்கள்... இன்னும் சமூகத்தில் என்னவெல்லாம் உயர் பொறுப்புகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.
இவர்கள் அனைவரும் உங்கள் நெருங்கிய குடும்பத்தில் இருக்கிறார்களா?
என் வீட்டில் இல்லை. என் உறவுகளில் இல்லை. என் ஊரில் இல்லை. இவர்களிலும் பெண்களைப் பார்த்தால் இல்லவே இல்லை.
ஆனால், இவர்கள் அனைவரும் ஆதிக்கச் சாதிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த நாட்டின் தலைவிதியை முடிவு செய்கிறார்கள். அது ஒரு போதும் பெரும்பான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொள்வதாக அமையாது.
இந்த ஆதிக்கம் தலைமுறை தலைமுறையாக பல நூறு ஆண்டுகளாக கல்வி, செல்வம், சமூக மதிப்பு என்று அவர்களுக்குக் கடத்தப்பட்ட சொத்தின் அறிகுறி.
நாம் ஒரு ஆள் மருத்துவமோ பொறியியலோ படித்து வீடோ காரோ வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டால், ஒட்டு மொத்த சமூகமும் முன்னேறி விட்டதாகப் பொருள் இல்லை.
என் தாத்தா, பாட்டி படிக்கவில்லை.
என் அப்பா M.Com. அம்மா படிக்கவில்லை.
நான் B.Tech, M.S. என் அக்கா கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை.
என் மகள் மருத்துவரோ அறிவியல் அறிஞரோ ஆகலாம்.
ஆனால், என் பேத்தி வழக்கறிஞர் ஆகும் காலத்திலும் உச்ச நீதிமன்றத்தில் யார் தீர்ப்பு சொல்வார்கள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை யார் தீர்மானிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
இட ஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்புத் திட்டமோ வறுமை ஒழிப்புத் திட்டமோ அல்ல. அது அதிகாரப் பகிர்வுத் திட்டம். 
அதிகாரம் என்பது பல அடுக்குள் கொண்டது. அதன் அத்தனை அடுக்குகளிலும் அனைத்துச் சாதியினரும் உரிமை பெறும் வரையிலும் இங்கு இட ஒதுக்கீடு என்னும் தத்துவத்திற்கான தேவை இருக்கிறது.

1 comment:

'பசி'பரமசிவம் said...

உண்மை...உண்மை.