Wednesday, July 16, 2008

பெரிய தம்பி

உங்களுக்கு பெரிய தம்பியை தெரியுமா? தன்னுடைய அம்மாவைக் கண்டால் பெரிய தம்பிக்கு பிடிப்பதேயில்லை. ஏனென்றால் பக்கத்து தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் கடைசி மாடியில் ஒரு அம்மா இருக்கிறார். அவர் நல்ல சிவப்பு நிறம். பார்க்க மிகவும் அழகாக வேறு இருப்பார். நல்ல வசதியானவரும் கூட. அவரை பார்த்தாலே பெரிய தம்பிக்கு மனதிற்கு மிகவும் தெம்பாக இருக்கும். அவர் மீது பாசத்தைப் பொழிவார். மின்சார கட்டணம் செலுத்துவது, பால், காய்கறி வாங்கி தருவது என எல்லா சில்லறை வேலைகளையும் செய்வார்.

அவருடன் உள்ள பழக்கத்தினால் பல பெரிய மனிதர்கள் அறிமுகமானார்கள். நல்ல பழக்க வழக்கங்கள் அதிகரித்தது. கைநிறைய ஊதியம் கிடைக்கக்கூடிய பணியும் அமைந்தது. ஒரே வரியில் சொல்வதானால் அவர் எங்கேயோ போய் விட்டார்.

ஆனால் அவரை பெற்று ஆளாக்கிய சொந்த அம்மாவின் நிலை? சொல்லி தெரிய வேண்டுமா அந்த அவலத்தை? மற்றவர்கள் திட்டுவதை விட சொந்த அம்மாவை அவர் திட்டுவதுதான் அதிகம். சொந்த அம்மாவை மதித்து அவரை நல்ல முறையில் கவனித்திருந்தால் இப்படிப்பட்ட மரியாதை, வேலை, பெரிய மனிதர்களின் பழக்க வழக்கம், அந்தஸ்து என எல்லாம் கிடைத்திருக்குமா?

இன்றைய நிலையில் சிவப்பு அம்மா தான் ஆங்கிலம். கறுப்பு அம்மா - தமிழ். பக்கத்து வீட்டு அம்மா மட்டுமல்ல எல்லா உயிரினங்களையும் நேசியுங்கள். அதே போல சொந்த அம்மாவையும் நேசியுங்கள்.

எல்லா மொழிகளையும் கற்று தேருங்கள். அதோடு அவரவர் சொந்த மொழியையும் கூட.

பக்கத்து வீட்டு அம்மாவை புகழ்ந்து சொந்த அம்மாவை அவமானப்படுத்தும் கேவலத்தை இனியாவது நிறுத்துங்கள்.

உங்கள் இல்லத்தின் வாசல் தமிழாக இருக்கட்டும். காற்று வர எத்தனை பிற மொழி சாளரங்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

No comments: