Monday, July 30, 2007

ஓய்வு பெறும் வயது 33 ?

உங்களுக்கு தெரியுமா? தனியார் துறையில் ஓய்வு பெறும் வயதை நடைமுறையில் 33 ஆக குறைத்து விட்டார்கள். இப்போது வரும் ஆட்கள் தேவை விளம்பரங்களைப் பார்த்தால் தலைப்பின் பொருள் சரியாகவே விளங்கிவிடும்.

பணியில் இருக்கும்போது நியாமான விடுமுறை, மருத்துவ வசதிகள், ஓய்வறை, பெண்களுக்கான அரசாங்கம் தரும் வசதிகள் என எதுவே சரியாக வழங்கப்படுவதில்லை. ஓய்வுகால ஊதியம், பி.எம். மற்றும் எந்த உதவித் தொகைகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. தொழிலாளர் நலத்திட்டங்கள் யாவும் ‘லேபர்’ எனப்படும் கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும்தான் நடைமுறையில் உள்ளது. ‘ஒயிட்காலர்’ பணி செய்பவர்கள் தான் இன்றைக்கு உண்மையான கொத்தடிமைகள். படிக்காதவர்களுக்கு இருக்கும் தன்மானத்தில் ஒரு பகுதியாவது இவர்களுக்கு இருக்குமானால் நிலைமை இப்படி இருந்திருக்காது.

33ஐ தாண்டி விட்டாலே தனியார் துறை ஊழியர் அடிமாடாகி விடுகிறார். இந்த வயதையும் தாண்டி பணிபுரிய வேண்டுமென்றால் சுயமரியாதை கிலோ என்ன விலையென்று கேட்க வேண்டும். இப்போது நிறைய ஓய்வு (33வயதுக்கு பிறகு என படிக்கவும்) பெற்றவர்கள் தங்களின் மீதி பொழுதைப் போக்க சேவை தான் செய்து வருகிறார்கள். அதாவது மீண்டும் வேறு பணியில் சேர வேண்டுமானால் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் உயிரோடு இருப்பதற்கும், பேருந்தில் பணியிடத்துக்கு வந்து போவதற்கும் சரியாக இருக்கும்!!

கணிணித்துறை வளர்ச்சி மட்டுமே வளர்ச்சியில்லை. அரசின் கடமை இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியை குறைப்பது. ஆனால் சில இந்தியர்கள் (டாடாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள், நாராயணமூர்த்தி, ...) எல்லா தொழிலையும் செய்து அதனால் இந்திய பொருளாதாரம் உயர்ந்தால் பயனில்லை. சுப்பனுக்கும் குப்பனுக்கும் வருமானம் உயர வேண்டும். அதுவே உண்மையான வளர்ச்சி.

No comments: