Thursday, December 06, 2007

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

கோவையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு புகழ் பெற்ற(?!?) தனியார் பள்ளி இருக்கிறது. இடம் கிடைப்பது குதிரை கொம்புதான். (சிலருக்கு அதெல்லாம் சாதாரணம்). என்ன செய்வது விதி வலியது. நானும் என் மகளுக்கு இடம் வேண்டி விண்ணப்பம் செய்தேன்.

இடம் கிடைத்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. நேர்முகத்தேர்வில் ஓரே ஒரு கேள்வி தான் கேட்டனர், அதுவும் என்னைப் பார்த்து. "இது உங்களுக்கு முதல் குழந்தையா?" நான், "ஆம்" என்றேன். அவ்வளவுதான்.

அப்போதே கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. எதை வைத்து இடம் கொடுத்தார்கள் எனக்கு. வரிசையில் நின்றிருந்த பலருக்கும் இடம் கிடைக்கவில்லை. காரணம்? யாருக்கு தெரியும்.

இந்த வருடம் வேறு பள்ளி பார்த்துக் கொண்டு போய் விடுங்கள் என கூறி விட்டனர். காரணம்? யாருக்கு தெரியும்.

அவர்களெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நான்.....

தோற்பது நன்று!!!!

நீதிமன்றம் இன்றைக்கு எந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்!!! என் அனுபவத்தையும் பதிவு செய்து வைப்போமே என்று நினைத்ததால் இந்த பதிவு.

என் தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது பாட்டனாரின் சொத்தை மற்ற சொந்தங்களுடன் சேர்ந்து விற்றார். அப்போது அவருக்கு உதவுவதாக(??!!??) சொல்லிக் கொண்ட நபருடன் சேர்ந்து செய்து கொண்ட ஒப்பந்ததில் சிக்கல் ஏற்பட்டு வழக்கு இன்றுவரை நடந்தது. தீர்ப்பு (??!!??) என்னவோ சாதகமாக தான் இருக்கிறது.

ஆனால் அதற்குண்டான பணச்செலவு, அலைச்சல், மனஉளைச்சல் இவையெல்லாம் சொல்லி மாளாது. தீர்ப்பை கேட்டு அவர் சொன்னது:

"இதுக்கு 15 வருடத்திற்கு முன்பே அவனுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டு நிம்மதியாவாவது இருந்திருக்கலாம்".

பின்குறிப்பு: புதுசா கண்டுபிடிச்சுட்டான்யா என்று சில பேர் முணுமுணுப்பது கேட்கிறது. அட நம்ம அனுபவத்தையும் பதிவு பண்ணி வச்ச பிற்காலத்தில வர்ற மக்கள் பார்த்து அட!! இந்த மாதிரியும் நடந்திருக்கான்னு தெரிஞ்சுக்குவாங்க பாருங்க அதான். :-)

Friday, August 17, 2007

அமெரிக்காவும் மெட்ரிகுலேஷன் பள்ளியும்

மனப்பாடம் செய்து வாந்தி எடுத்து அதிக மதிப்பெண் மட்டுமே வாங்கத் தெரிந்த நவீன கோமாளிகளை வைத்துக் கொண்டு மற்றவர்களை டிசி கொடுத்து வெளியில் அனுப்பும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் புத்திசாலித்தனமும், ஜால்ரா அடிக்கும் சமூக பிரக்ஞை அற்ற அறிவாளிகளை(?) மட்டும் சேர்த்துக் கொள்கிற அமெரிக்காவின் புத்திசாலித்தனமும் ஓன்றே.

(அடடா எண்ணமா சிந்திக்கிற... என்னமோ போடா...)

Monday, July 30, 2007

ஓய்வு பெறும் வயது 33 ?

உங்களுக்கு தெரியுமா? தனியார் துறையில் ஓய்வு பெறும் வயதை நடைமுறையில் 33 ஆக குறைத்து விட்டார்கள். இப்போது வரும் ஆட்கள் தேவை விளம்பரங்களைப் பார்த்தால் தலைப்பின் பொருள் சரியாகவே விளங்கிவிடும்.

பணியில் இருக்கும்போது நியாமான விடுமுறை, மருத்துவ வசதிகள், ஓய்வறை, பெண்களுக்கான அரசாங்கம் தரும் வசதிகள் என எதுவே சரியாக வழங்கப்படுவதில்லை. ஓய்வுகால ஊதியம், பி.எம். மற்றும் எந்த உதவித் தொகைகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. தொழிலாளர் நலத்திட்டங்கள் யாவும் ‘லேபர்’ எனப்படும் கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும்தான் நடைமுறையில் உள்ளது. ‘ஒயிட்காலர்’ பணி செய்பவர்கள் தான் இன்றைக்கு உண்மையான கொத்தடிமைகள். படிக்காதவர்களுக்கு இருக்கும் தன்மானத்தில் ஒரு பகுதியாவது இவர்களுக்கு இருக்குமானால் நிலைமை இப்படி இருந்திருக்காது.

33ஐ தாண்டி விட்டாலே தனியார் துறை ஊழியர் அடிமாடாகி விடுகிறார். இந்த வயதையும் தாண்டி பணிபுரிய வேண்டுமென்றால் சுயமரியாதை கிலோ என்ன விலையென்று கேட்க வேண்டும். இப்போது நிறைய ஓய்வு (33வயதுக்கு பிறகு என படிக்கவும்) பெற்றவர்கள் தங்களின் மீதி பொழுதைப் போக்க சேவை தான் செய்து வருகிறார்கள். அதாவது மீண்டும் வேறு பணியில் சேர வேண்டுமானால் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் உயிரோடு இருப்பதற்கும், பேருந்தில் பணியிடத்துக்கு வந்து போவதற்கும் சரியாக இருக்கும்!!

கணிணித்துறை வளர்ச்சி மட்டுமே வளர்ச்சியில்லை. அரசின் கடமை இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியை குறைப்பது. ஆனால் சில இந்தியர்கள் (டாடாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள், நாராயணமூர்த்தி, ...) எல்லா தொழிலையும் செய்து அதனால் இந்திய பொருளாதாரம் உயர்ந்தால் பயனில்லை. சுப்பனுக்கும் குப்பனுக்கும் வருமானம் உயர வேண்டும். அதுவே உண்மையான வளர்ச்சி.

Tuesday, July 24, 2007

டீவிக்கு செய்யும் போன்?

ஏனுங்க சாமி டீவிக்கு செய்யற வெட்டி தொலைபேசிக்கு அதிக கட்டணம் செய்யும் பொன்னாள் என்னாளோ?

வாழ்த்து சொல்லலாம் வாங்க, அல்லோ அல்லோ, நீங்கள் கேட்ட பாடல், இத்தியாதி இத்தியாதி. பாமரன் அவர்களின் கருத்துகளை படித்தால் ஏற்பட்ட தெளிவுதானுங்க இதெல்லாம்

Sunday, July 22, 2007

யார் கழுதை?

நேற்று குழந்தையை அவள் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். சிக்னலில் எதிர்புறம் நின்று கொண்டிருந்தது அந்த பாவப்பட்ட கழுதை.

அதன் இரு முன்புற கால்கள் கட்டப்பட்டு எப்படியோ சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டிருந்தது. எல்லா வாகனங்களும் அதன் மேல் இடித்துவிடாமல் மிகவும் கவனமாக சென்று கொண்டிருந்தன.

யாராவது இடித்து கொன்றால் உடனே தன் துன்பங்களிலிருந்து விடுதலை என்று சொல்வது போலிருந்தது அதன் கண்களைப் பார்த்த போது.

ஏன் யாருமே கழுதையை ஒரு உயிராக மதிப்பதில்லை? என் குழந்தை இதுவரை கழுதையை நேரில் பார்த்ததே இல்லை. இனிமேலும் பார்க்கவே முடியாதோ?

Sunday, July 01, 2007

யாருங்க இந்த பிரதீபா பாட்டீல்?

ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடற இன்னோரு வேட்பாளர் ஷெகாவத்தோட பேர பலமுறை கேட்டிருக்கேன். ஆனா இந்தம்மா யாரு, இத்தன நாள் எங்கிருந்தாங்க, மக்களுக்கு என்ன பண்ணியிருக்காங்க, அட இனிமே தான் என்ன பண்ண போறாங்கன்னு யாராச்சும் சொன்ன கேட்டுக்குவேன்.